#viralnews | வயதானவர்களை இளமையாக்கும் டைம் மிஷின் | புதிய வகை மோசடியில் சிக்கிய பலே தம்பதி!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 'பண்டி அவுர் பாப்லி' என்பவர் டைம் மிஷின் மூலம் மக்களை 25 வயது போல் காட்டி ஏமாற்றி 35 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய மோசடி, டிஜிட்டல் மோசடி, ஆன்லைன் கேமிங் ஆப் போன்ற தளங்களில் இருந்து பல மோசடி செயல்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் கான்பூரில் வந்த மோசடி வழக்கு நாட்டிலேயே முதல் முறையாகும். இங்கு இளம் ஜோடி ஒன்று, 'டைம் மிஷின்' மூலம் முதியோர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம் என்ற பெயரில், பலரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்து தப்பினர். இதையறிந்த சிலர் உடனடியாக போலீசில் புகார் செய்தனர். இப்போது கான்பூர் போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து, 'பண்டி மற்றும் பாப்லி' என்று கூறப்படும் நபரை தேடி வருகின்றனர்.
கித்வாய் நகரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, போலீசில் புகார் செய்தார். பின்னர் முழு விஷயமும் வெளியில் வந்தது. போலீஸ் விசாரணையில், முதியவர்களை 25 வயது இளமையாகக் காட்டுகிறோம் என்ற பெயரில், பலரை தம்பதியினர் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுமட்டுமின்றி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார்கள்.
இஸ்ரேலில் இருந்து சிறப்பு இயந்திரம் என்ற பெயரில் மோசடி:
விசாரணையில் ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி ஆகியோர் கோவிந்த்நகர் காவல் நிலையப் பகுதியில் ரிவைவல் வேர்ல்ட் என்ற பெயரில் சிகிச்சை மையத்தைத் திறந்தனர். இந்த மையத்தில் 65 வயது முதியவரை 25 வயது சிறுவனாக மாற்றும் சிறப்பு கால இயந்திரத்தை இஸ்ரேலிடம் இருந்து ஆர்டர் செய்துள்ளதாக கூறப்பட்டது. கான்பூரில் அசுத்தம் அதிகம் என்றும், இதனால் மக்கள் விரைவில் முதுமை அடைகின்றனர் என்றும் இருவரும் பலரை ஏமாற்றியுள்ளனர். இந்த இயந்திரத்தின் மூலம் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, இதன் காரணமாக மக்கள் சிறிது நேரத்தில் இளமையாக மாறுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, சிகிச்சைக்கு ஆள் சேர்த்து விட்டால் அவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி ஏராளமான முதியவர்கள் ரிவைவல் வேர்ல்டுக்கு படையெடுத்தனர். தங்களுக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து விட்டனர். இதனால், ராஜீவ் துபே மற்றும் ராஷ்மி தம்பதிக்கு பணம் கொட்டத் தொடங்கியது.
ஒரு சுற்று சிகிச்சைக்கு ரூ.6 ஆயிரம் பெற்ற போதும், இளமையாக மாறாததால் முதியோர்கள் விழிப்படைந்தனர். இது தொடர்பாக ராஜீவ் துபே மற்றும் ராஷ்மியிடம் கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி தப்பிக்கப் பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அந்த மோசடி தம்பதி தலைமறைவானது. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இதுவரை 15 பேரிடம் இருந்து 35 கோடி ரூபாய் மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக டிசிபி அங்கிதா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவிந்த்நகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருவரையும் தேடி வருகின்றனர். இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.