#Viral | "இது புதுசா இருக்குண்ணே"... எம்.எல்.ஏ-விடம் நூதன கோரிக்கை வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்!
44 வயதான பெட்ரோல் பங்க் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் பெண் பார்க்க உதவி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் பொதுவாக மாவட்ட ஆட்சித் தலைவர், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தங்களுக்கான பிரச்னைகளை கூறி அதனை தீர்த்து வைக்குமாறு கோரிக்கை வைப்பர். அவ்வாறு கோரிக்கை வைப்பதன் மூலம் சில நேரங்களில் அவர்களின் பிரச்னையின் சரி செய்யப்படுகிறது. அந்த வகையில், சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிப்பார். சில நேரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் ஏதேனும் நிகழ்ச்சிக்கு வரும் நேரங்களிலும் சிலர் மனுக்களை அளிப்பர். அந்த வகையில், பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் எம்.எல்.ஏ -விடம் அளித்த கோரிக்கை ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலேந்திர கரே. இவர் மஹோபா என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். அகிலேந்திர கரே வழக்கம் போல் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷண் ராஜ்புட் காரில் வந்துள்ளார். அப்போது, எம்.எல்.ஏ-விடம், அகிலேந்திர கரே பேச தொடங்கினார்.
அப்போது, அகிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் "தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்" எனக் கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ. பிரஜ்பூஷண் ராஜ்புட் "உங்களுக்கு என்ன வயது ஆகிறது" எனக் கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர் "44 வயது ஆகிறது" என்றார். "உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?" என எம்.எல்.ஏ. கேட்க, அந்த ஊழியர், "நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்" எனக் கூறுகிறார்.
அதற்கு எம்.எல்.ஏ. "வேறு யாரிடம் பெண் பார்க்க சொன்னீர்களா? நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். பெண் தேட முயற்சிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு வாக்களித்துள்ளீர்கள்" எனக் கூறுகிறார். உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒருவேளை பெண் வீட்டார் கேட்டால் கூற வேண்டும் எனக் கேட்க, அந்த ஊழியர், "6 ஆயிரம் ரூபாய். மேலும், 13 பிகாஸ் நிலம் உள்ளது" என்கிறர். அதற்கு எம்.எல்.ஏ. "நிலம் கோடிக்கணக்கில் மதிப்பு மிக்கது. உங்களுக்கு உதவி செய்வேன்" எனக் கூறுவது போல் உரையாடல் முடிவடைகிறது. இந்த உரையாடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.