#Viral | "ஹே தள்ளு… தள்ளு…தள்ளு…" காமடி சீன் பாணியில் ரயிலை தள்ளிய ரயில்வே ஊழியர்கள்!
உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ரயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்ற சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையில் வாகனங்கள் செல்லும்போது திடீரென நடு வழியில் நின்று விட்டால் உடனடியாக அந்த வாகனத்தை ஓரம் கட்டுவதற்காக வாகனங்களில் இருக்கும் பயணிகளை இறங்கி வாகனத்தை தள்ளி செல்லும் சம்பவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். காரை ஓரிரு நபர்கள் சேர்ந்தாலே தள்ளி சென்று விட முடியும். பெரிய பெரிய பஸ்களை கூட பத்து, இருபது பேர் சேர்ந்து தள்ளி செல்வதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் பழுதாகி நின்ற ரயிலை தள்ளிச் செல்வதை யாராவது பார்த்துள்ளீர்களா? இதுபோன்ற சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ரயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த மார்ச் மாதத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது, அமேதி மாவட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான ரயில் நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ஊழியர்கள் ரயிலை தள்ளிச் சென்றதாக சொல்லப்படுகிறது.