#Viral | கொச்சி வாட்டர் மெட்ரோவில் ஒலித்த 'அஜித்தே'… இணையத்தை கலக்கும் வீடியோ!
கொச்சி வாட்டர் மெட்ரோவில் பயணித்த வெளிநாட்டினர் சிலர் 'கடவுளே-அஜித்தே' என கோஷம் எழுப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார். இவர் கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித். இப்படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருந்தார். பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, வலிமை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கி வரும் ‘விடாமுயற்சி’ படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகின்றனர். சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள கொச்சி வாட்டர் மெட்ரோவில் பயணம் செய்த வெளிநாட்டவர் சிலர் "கடவுளே-அஜித்தே" என கோஷம் எழுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.