For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மணிப்பூரில் 6 பேரின் கொலைக்கு நீதி கேட்டு தீவிரமடைந்த வன்முறை!

07:23 AM Nov 17, 2024 IST | Web Editor
மணிப்பூரில் 6 பேரின் கொலைக்கு நீதி கேட்டு தீவிரமடைந்த வன்முறை
Advertisement

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தால் 7 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு சனிக்கிழமை மாலை 5:15 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஏழு மாவட்டங்களில் இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த வாரம் ஜிரிபாமில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டது, மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, சனிக்கிழமையன்று பாஜகவை சேர்ந்த மூன்று மணிப்பூர் அமைச்சர்கள் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை எதிர்ப்பாளர்கள் தாக்கியதால் மீண்டும் கலவரம் வெடித்தது.

முதலமைச்சரின் வீட்டுக்குள் நுழைய முயற்சி:

முதலமைச்சர் பிரைன் சிங்கின் தனிப்பட்ட இல்லத்திலும் நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரது மருமகனும் பாஜக எம்எல்ஏவுமான ராஜ்குமார் இமோ சிங், எம்எல்ஏக்கள் ரகுமணி சிங், சபம் குஞ்சகேஸ்வரர் மற்றும் சபம் நிஷிகாந்தா ஆகியோரின் வீடுகள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். ராஜ்குமாரின் இல்லம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள், 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்டில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

அமைச்சர் உத்தரவாதம்:

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆறு எம்.எல்.ஏ.க்களில் மூன்று பேரின் வீடுகளை சூறையாடி அவர்களின் சொத்துக்களுக்கு தீ வைத்தனர், இம்பாலின் பல்வேறு பகுதிகளில் அவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன.  இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் சபம் ரஞ்சன் லாம்பெல் சனகீதெலின் இல்லத்தை ஒரு கும்பல் தாக்கியது. அப்போது, 3 பேர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், பொதுப் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணத் தவறினால் பதவி விலகுவதாகவும் அவர் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.

இணையதள சேவை முடக்கம் & ஊரடங்கு:

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தௌபல், காக்சிங், காங்போக்பி மற்றும் மணிப்பூரின் சுராசந்த்பூர் ஆகிய இடங்களில் இணைய சேவைகள் நிறுத்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு,  சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதால், இம்பால் பள்ளத்தாக்கில் காலவரையின்றி மாநில அரசு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. இம்பால் பள்ளத்தாக்கின் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்ணுபூர், தௌபல் மற்றும் கக்சிங் மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

இதனிடயே, மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மணிப்பூர் மாநிலம் மத்திய அரசால் மறக்கப்பட்டுள்ளதாகவும், அமைதிக்கான அந்த மாநில மக்களின் கோரிக்கை செவித்திறன் இல்லாதவர்களின் காதுகளில் ஒலிக்கட்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Advertisement