வங்கதேசத்தில் வெடித்த வன்முறை - மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!
அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. கடந்த 10ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. செவ்வாயன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை காரணமாக 3 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்கா பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விடுதிகளை காலிசெய்துவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. எனினும் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர் மக்சுத் கமால் இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.