வினேஷ் போகத்தின் உடல் எடை குறைப்பு தோல்வி ஏன்? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் உடல்நிலை குறித்து பி.டி உஷா மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையேதான், இரவு முழுக்க உறங்காமல் கடுமையான பயிற்சி மேற்கொண்ட வினேஷ், நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, “வினேஷின் தகுதி நீக்கம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நான் சிறிது நேரத்திற்கு முன்பு வினேஷை சந்தித்து இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய அரசும், ஒட்டுமொத்த நாடும் அவருக்கு முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்தேன். அவருக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என தெரிவித்தார்.
“மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது..!”https://t.co/WciCN2SiwX | @PTUshaOfficial | @Phogat_Vinesh | #VineshPhogat | #Paris2024 | #Olympics | #PTUsha | #IOA | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/vXbkexd3T6
— News7 Tamil (@news7tamil) August 7, 2024
தொடர்ந்து, வினேஷ் போகத்தின் உடல் எடை குறைப்பதற்காக கடுமையாக முயற்சித்ததாக ஊட்டச்சத்து நிபுணர் தின்ஷா பர்திவாலா தெரிவித்துள்ளார். வினேஷின் உடல் எடையை குறைக்க மருத்து குழுவின் மேற்கொண்ட அயராத முயற்சியை நான் நன்கு அறிவேன் என இந்திய ஒலிம்பிக் டாக்டர் தின்ஷா தெரிவித்துள்ளார்.