வினேஷ் போகத் வழக்கு : சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று தீர்ப்பு!
வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
33வது ஒலிம்பிக் போட்டியில், ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ள வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரியுள்ளார். இதனிடையே, என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஆகஸ்ட் 8ம் தேதி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்த வழக்கு 9ம் தேதி மாலை நீதிபதி அனபெல் பெனட் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் 10ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று (11.8.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.