தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட 312 விநாயகர் சிலைகளானது வருகிற 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக நீர் நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தென்காசி, செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளானது நேற்றைய தினம் நீர்நிலைகளை கரைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 85 விநாயகர் சிலைகளானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
இதனிடையே புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆக.29) மதியம் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் மாதத்தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.