விழுப்புரம் செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!
உலக அளவில் புராதனமான இடங்களை யுனெஸ்கோ நிறுவனம் ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கும்பகோணம் ஐராவ தீஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை, நீலகிரி மலை ரயில் உள்ளிட்டவற்றை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சத்திரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகள், மராட்டிய மன்னர்களின் ராணுவ கேந்திரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாசார ரீதியிலான உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.
அதற்கு இணங்க அந்த பட்டியலில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், ஒரு கோட்டை தமிழகத்திலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளன. மராட்டியர்கள் கி.பி., 1678 முதல் 1697 வரை செஞ்சி கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததால், புராதன பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள 12 கோட்டைகளையும் யுனெஸ்கோவின் தேர்வுக்குழு பிரதிநிதிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தென் கொரியாவில் இருந்து வந்த யுனெஸ்கோ பிரதிநிதிகள், செஞ்சிக் கோட்டையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யதனர்.
இந்த ஆய்வின் போது மத்திய அரசின் உயரதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயரதிகாரிகள் என 7 பேர் உடனிருந்தனர். மேலும் யுனெஸ்கோ குழு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனும் கலந்துரையாடியது. இந்த நிலையில் தான் யுனெஸ்கோ நிறுவனம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மற்றும் இப்பகுதி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.