2024-ல் தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்கள்!
2024-ல் ரசிகர்களிடையே அதிகம் கவனம் பெற்ற தமிழ் சினிமாவின் வில்லன்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்னும் ஒரு சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட வில்லன்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
கல்கி 2898 ஏடி - கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 AD படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றி இருந்தாலும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தில் இவரின் தோற்றமும் பெரிதாக பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது.
கோட் - விஜய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய், காந்தி - ஜுவன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில், விஜயின் ஜீவன் என்ற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஜீவன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். யாரும் எதிர்பார்க்காத அளவில் விஜய் நடிப்பில் கலக்கி இருந்தார். வில்லன் கதாபாத்திற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசையும் கச்சிதமாக பொருந்தி இருந்தது.
விடுதலை - சேத்தன்
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு விடுதலை படத்தின் 2 ம் பாகம் வெளியானது. இதில், சேத்தன் மிகவும் வில்லனாக நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.
கங்குவா - பாபி தியோல்
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்தான் பாபி தியோல். உதிரன் என்ற கேரக்டரில் நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக வந்தவர். தற்போது எச்.வினோத் இயக்கி வரும் விஜய் 69 படத்திலும் இவர் தான் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்தியன் 2 - எஸ்.ஜே.சூர்யா
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான 'இந்தியன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் இந்தாண்டு வெளியானது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். இந்தப் படத்தில் அவர் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கு வில்லன் கதாபாத்திரம்தான் சிறப்பாக பொருந்தும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இப்படத்திலும் இவரின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்த பாகத்தில் இவருக்கு நடிக்க நிறைய ஸ்கோப் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மகாராஜா - அனுராக் காஷ்யப்
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மகாராஜா. விஜய்சேதுபதிக்கு மிரட்டல் வில்லனாக அதே நேரம் ஸ்மார்ட்டாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இவர் படத்தில் செல்வம் என்ற கேரக்டரில் வருவார். இதே படத்தில் சிங்கம்புலியும் கொடூரமான ஒரு வில்லத்தனத்தைக் காட்டியிருப்பார். இப்படம் வெற்றி படமாக அமைந்ததற்கு வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்களும் ஒரு முக்கிய பங்காகவே பார்க்கப்படுகிறது.