For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இறந்த கோயில் காளை..கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

08:50 PM Mar 12, 2024 IST | Web Editor
இறந்த கோயில் காளை  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இறந்த கோயில் காளைக்கு அக்கிராம மக்களும், சுற்றுவட்டார மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சங்கீதப்பட்டி ஊராட்சியில் வெங்காயனூர்
கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஏரியின் அருகே செம்பு மாரியம்மன் கோயில்
உள்ளது. இந்த கோயிலில் கிராம மக்களால் அம்மனுக்கு நேர்ந்து விட்ட காளை மாடு
ஒன்று வளர்ந்து வந்தது. இந்த காளையை கிராம மக்கள் அனைவரும் வளர்த்து வந்தனர்.
இந்த காளை மாடு கிராம மக்களிடமும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும் பாசமுடன்
பழகி வந்துள்ளது. அதேபோல கிராமத்தில் திருடர்களோ, அந்நியர்களோ இரவில்
நடமாடுவதையும் தடுத்து வந்துள்ளது. அதனாலே இந்த காளையை அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாகவும், அம்மன் சக்தியாகவும் கருதி வந்துள்ளனர்.

இந்த நிலையில், காளை மாடு வயது முதிர்வின் காரணமாக நேற்று மதியம் கோயில் வளாகத்திலேயே படுத்த நிலையில் இறந்துள்ளது. இதையறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, காளை மாடுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலை அணிவித்தும், மஞ்சள் குங்குமம் பூசியும் மரியாதை செலுத்தினர். பாசமான பிள்ளையாக வளர்ந்து வந்த காளை மாடு இறந்த செய்தி கேட்டு அக்கம்பக்கத்து கிராம மக்களும், வெளியூர் சென்றிருந்த மக்களும், வந்து நேரடியாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, காளை மாட்டின் உடலுக்கு மனிதர்களுக்கு செய்வதை போல மேலதாளம்
முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பெண்கள் பலரும் கண்ணீர் வடித்தனர். ஊரே
கூடி நின்று, ஒவ்வொருவராக காளையின் உடலை தொட்டு வணங்கி வழிபட்டு மலர்களை
தூவினர். பின்னர் கோயில் வளாகத்தில் குழிதோண்டி, ஜெ.ஜி.பி வாகனத்தின்
உதவியுடன், மாட்டை தூக்கி வந்து குழியில் மாடு படுத்து இருப்பதை போல அமர்த்தி
அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தின்போது, கோயில் காளையுடன் பழகி வந்த மற்றொரு
காளை அடக்கம் செய்வதை பார்த்து கண்ணீர் விட்டது.

இந்த சம்பவம் ஓமலூர் வட்டாரத்தில் சோகத்தையும், கிராம மக்களின் கால்நடைகள் மீது நெகிழ்ச்சியான பாசத்தையும் காட்டியது.

Tags :
Advertisement