நாங்குநேரி அருகே மழை வெள்ளத்தால் 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ள கிராமம்!
நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர் கிராமம் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ளதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் ஆறு, கால்வாய்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோல நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர்
கிராமத்தில் ஓடும் கால்வாயிலும் கட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால்
அங்குள்ள 2 பாலங்கள் உடைந்தன. மேலும் சாலைகளிலும் அரிப்பு உருவானது.
இதையடுத்து கிராமம் துண்டிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!
இந்த நிலையில் கிராம மக்கள் 4-வது நாளாக கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால் கிராம மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். சென்பகராமநல்லூர் கிராமம் தனி தீவாக மாறியுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம் வடியாமல் ஆறு போல ஓடுவதால் வாழை மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள செண்பகராமநல்லூர் கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.