லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது போர்வெல்லுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்தை தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் ராஜேந்திரனிடம், நிலத்திற்கான உரிமையாளர் சான்று மற்றும் தடையில்லா சான்று பெற்று வருமாறு கூறினர். இதனையடுத்து, அவர் சான்றிதழ் பெறுவதற்கு கோவிலூர் கிராம நிர்வாக அலுவலரை ரவியை தொடர்பு கொண்ர்.
கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரனின் நிலத்திற்கு சான்றிதல் வழங்குவதற்கு ரூ.2500 ரூபாய் லஞ்சமாக கேட்டார். ராஜேந்திரன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாரளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்பாட்டின் படி கடந்த 5.1.2012 அன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் ரவியிடம் கொடுத்தார்.
அப்போது, ரவி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிராம நிர்வாக அலுவலர் ரவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.