விளவங்கோடு தொகுதி காலி - சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!
விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி (விளவங்கோடு தொகுதி), நேற்று முன்தினம் (பிப். 24) டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு விஜயதரணி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
விஜயதரணி எழுதியுள்ள கடிதத்தில், "நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பிப்ரவரி 24-ம் தேதி முதல் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே, நெல்லையில் நேற்று (பிப். 25) பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தெரிவித்தார். இந்த கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கிடைத்ததும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடும் என்றே தெரிகிறது. அவ்வாறு நடந்தால், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டுமா என்பது சபாநாயகர் பரிசீலனையில் உள்ளது என பேரவை செயலாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.