விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 17வது சுற்று நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 58,785 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. தேர்தலில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானது.
இதையும் படியுங்கள் : பஞ்சாப் இடைத்தேர்தல் - ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி!
இதையடுத்து, வாக்கு பதிவிற்கு பின்னர், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் 16வது சுற்று நிலவரத்தின்படி, திமுக 1,06,908 வாக்குகளும், பாமக 48,123 வாக்குகளும் மற்றும் நாதக 9,094 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 58,785 வாக்குகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.