For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ActorVijay-யின் திரைப்படங்கள்... தடைகளும்... பிரச்னைகளும்...

09:30 AM Sep 05, 2024 IST | Web Editor
 actorvijay யின் திரைப்படங்கள்    தடைகளும்    பிரச்னைகளும்
Advertisement

நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பும். படப்பிடிப்பு தளங்களில் ஆரம்பிக்கும் பிரச்னை, பின்னர் படத்தின் தலைப்பில், ஆடியோ வெளியீட்டு விழா, வசனம் என சுற்றி சுழன்று அடிக்கும். தற்போது கோட் திரைப்படமும், சிறப்பு காட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இதுவரை சர்ச்சைகளை சந்தித்த விஜய் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்….

Advertisement

புதிய கீதை

ஜெகன் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு புதிய கீதை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு கீதை என்று தான் முதலில் பெயர் வைக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடித்த படத்திற்கு ‘கீதை’ என்று பெயர் வைக்கக் கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து ‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியானது.

காவலன்

2011-ம் ஆண்டு காவலன் திரைப்படம் வெளியானது. ஆனால், சுறா படத்தின் தோல்வியால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வரை படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். அதேவேளை படத்தை வெளியிடக் கோரி ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். கடைசியில், விஜய் நஷ்ட ஈடு கொடுத்ததைத் தொடர்ந்து ‘காவலன்’ திரைப்படம் வெளியானது.

துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி ‘கள்ளத்துப்பாக்கி’ படக் குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் வழக்கை திரும்பப் பெற்றதால், இந்தப் படத்தின் மீதான தடை நீங்கியது. அதன் பிறகு இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்திற்கு தடைக்கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்படுவதாக தெரிவித்த பின் திரைப்படம் வெளியானது.

தலைவா

ஏ.எல். விஜய் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. அரசியல்ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்த நேரத்தில், ‘டைம் டூ லீட்’ என்கிற டேக் லைனுடன் தலைவா பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது பரபரப்பை கூட்டியது. இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று அரசுக்கு மர்ம கடிதம் வந்ததாகக் கூறி, பாதுகாப்பு கருதி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது. ஜெயலலிதாவை சந்திக்க படக்குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை.

இதனால், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்டப்படி படம் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்கள் கழித்து தான் இந்தப்படம் வெளியானது. அதுவும் “டைம் டூ லீட்” என்கிற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியானது. மேலும், பட வெளியீட்டு பிரச்னையால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக, இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கத்தி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தாகக் கூறி, கத்தி படத்தை வெளியிட சில தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டங்கள் வெடித்தன.

புலி

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி. இந்தப் படம் வெளியான நாளில், விஜய் உட்பட அந்த படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு பகல் காட்சி தான் திரைப்படம் வெளியானது.

தெறி

அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்தப் படத்திற்கு அதிக விலை விதிக்கப்பட்டதாலும், மினிமம் கேரண்டி முறையில் படத்தை வாங்கக் கூறி வற்புறுத்தப்பட்டதாலும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் சென்னையிலேயே முக்கிய திரையரங்குகளில் மட்டுமே இந்தப்படம் வெளியாகியிருந்தது. செங்கல்பட்டு பகுதி உட்பட்ட பல திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும், முக்கியமான பல இடங்களில் படம் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை என படக்குழு படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட்டது.

மெர்சல்

அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டதாக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், படம் வெளியாவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. படத்தில் உள்ள காட்சிகளில் விலங்குகளை துன்புறுத்தப்பட்டதாகவும் ஒரு தனி சர்ச்சை எழுந்தது.

சர்கார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்கார். இந்தப் படத்தின் கதை தன்னுடைய கதையின் தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் வருண் ராஜேந்திரன் பெயருக்கு கிரெடிட்ஸ் கொடுப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் உறுதியளித்ததை அடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் இந்தப் பட வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பல விஷயங்களை விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பிகில்

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்தப் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சி வெளியானது. அந்தக் காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில், ''எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்,'' என்ற வசனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

மாஸ்டர்

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது மாஸ்டர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துவந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைய சில நாட்கள் இருந்தபோது, விஜய்யின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது மட்டுமில்லாமல், படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதுடன் கூடவே, அவரை சென்னைவரை அவர்களது காரிலேயே அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

இதன்பிறகு, படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பிய விஜய் வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் அந்தப் புகைப்படங்களும் படு வைரலாகின. மேலும் கொரோனா காரணமாக படங்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்தநிலையில், பொங்கலை முன்னிட்டு ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி கேட்டிருந்தார். அதன்படி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே சில நாட்களில் மாஸ்டர் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பீஸ்ட்

2022-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம், ஏப்ரல் 14-ம் தேதி முதலில் வெளியாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் பான் இந்தியா படமாக உருவாகியிருந்த கன்னட நடிகர் யஷ்ஷின் கே.ஜி.எஃப். 2 திரைப்படமும் தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களிலும் அதே தேதியில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது.

மேலும், படத்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி, கத்தார், குவைத் நாடுகளில் படத்தின் வெளியீடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியும் தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்தை தடைசெய்யக் கோரிக்கை விடுத்திருந்தது.

வாரிசு

2023ம் ஆண்டு விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. கடந்த 2019-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக இருந்த நிலையில், அப்போது ஆந்திராவில் தெலுங்கு நேரடி திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கூறிய நிலையில், அதனையே தற்போது சுட்டிக் காட்டி, தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் சங்கம் விஜய் படத்துக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்குமாறு ஆந்திரா, தெலங்கானா திரையரங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் இந்தப் படம் அங்கு குறிப்பிட்டப்படி வெளியாவதில் சிக்கலை சந்தித்தது.

லியோ

இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் நான் ரெடி தான் வரவா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னதாக வெளியாகியிருந்தது. இதில் "பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க" என்ற வரிகள் சர்ச்சையை கிளப்பியது. மேலும் ட்ரெய்லரில் பயன்படுத்தியிருந்த கெட்ட வார்த்தையும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது. சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில் ட்ரெய்லரை காட்சிப்படுத்திய போது ரசிகர்கள் திரையரங்க சீட்டுகளில் ஏறி நின்று அட்டகாசம் செய்ததில் சீட்டுகளில் சேதம் ஏற்பட்டது.

பின்னர், 2023-அக்டோபர் 19-ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வந்தது. லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதிகாலை 4 மற்றும் 7 மணிகளுக்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதில் கை விரித்த உயர் நீதிமன்றம், 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி அரசிடம் தயாரிப்பு நிறுவனம் மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதுப்போக சென்னை உள்ளிட்ட முக்கிய திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் லியோ திரைப்படத்தின் ஒரு வார கலெக்சனில் தயாரிப்பு நிறுவனம் 75 சதவீதம் கேட்டதாக கூறப்பட்டது. இப்படி, எதை தொட்டாலும் வெற்றி மாதிரி விஜய் எது பண்ணாலும் பிரச்னை ஆகுது என்ற பேச்சு எழுந்தது.

கோட்

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் ‘கோட்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமும் பிரச்னைகளின்றி வெளியாகவில்லை. முதலில் கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் காட்சிகள் AI தொழில்நுட்பத்தின் வாயிலாக சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை குறிப்பிடாமல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், உரிய அனுமதியின்றி விஜயகாந்தின் AI தொழில்நுட்ப காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். இதனை அடுத்து விஜய்யும், படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவும் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்த நிலையில் இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக கோட் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சியை திரையிடுவதற்கான அனுமதி நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று (04.09.2024) மாலை 4 மணிக்குதான் வழங்கப்பட்டது. அதற்குள்ளாகவே பல விநியோகஸ்தர்கள் சிறப்பு காட்சிக்கு ஒரு டிக்கெட்டுக்கு பங்காக ரூ.700 முதல் ரூ.800 வரை கேட்பதால் சிறப்பு காட்சி திரையிடப்படாது என தமிழகத்தின் சில பகுதிகளில் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இது விஜய்யின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement