விஜய்காந்த் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் வீடு திரும்புவார் - மருத்துவமனை அறிக்கை!
தேமுதிக தலைவர் விஜய்காந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக நீண்ட நாட்களாகவே பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து விட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சினிமாவில் நடித்த காலங்களில், படப்பிடிப்பின் போது உடல் முழுவதும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயம், வயது மூப்பு போன்ற காரணங்களால் அவருடைய உடல் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் அவருக்கு இது போன்று உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவ.18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.