விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் - தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினவிழாவில் கலந்துகொள்ள நடிகர் விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இவரது மறைவால் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் ஆழ்ந்தது. அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளை அவரது முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தேமுதிக செய்து வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணைச் செயலாளர் சதீஷ் , கழகத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் ஆகியோர் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் நேரில் சென்று, விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கும் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சதீஷ், பார்த்தசாரதி, விஜய பிரபாகர் ஆகியோர் விஜய்யை நேரில் சந்தித்து ‘முதலாம் ஆண்டு குருபூஜை’ விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.