விஜயகாந்த்தின் மறைவு ஈடு செய்ய முடியாதது - ஓபிஎஸ் நேரில் அஞ்சலி!
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில், அவர் பேசியதாவது:
”விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பு நண்பர் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், தலைவராகவும் இருந்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவுபவர். நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, அந்த சங்கத்தின் கடன்களை தீர்த்தவர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டவர். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” இவ்வாறு பேசினார்.