#GOAT படத்தில் கேப்டன் பிரபாகரனாக விஜயகாந்த்!
கோட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தோற்றம் குறித்து வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் (செப். 5) வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் கடந்த 2-ம் தேதி வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
படத்தில் யாரெல்லாம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு நேரத்திலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு காட்சியில் பயன்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்த தகவல் வெளியானது.
இந்நிலையில், கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்திலிருந்த விஜயகாந்த் தோற்றத்தை இப்படத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். கோட்டில் விஜய் புலனாய்வுத் துறை ஏஜெண்டாக நடித்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜய்காந்த் காவல்துறை உயரதிகாரியாக நடித்ததை இப்படத்துடன் தொடர்புபடுத்தும் காட்சிகள் இருக்கலாம்.