விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு... பொதுக்குழு கூட்டத்துக்கு இடையே வெளியான அதிரடி அறிவிப்பு!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும். பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!
இதில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தப் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர் இன்று (30.04.2025) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.