தலைப்பாகை, உடல் முழுவதும் நாமம் உடன் கள்ளழகராக மாறிய விஜய் - மதுரையெங்கும் தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறி கட்சியை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறார். இதன்பொருட்டு தற்போது பல்வேறு நிகழ்ச்சிகள், நிர்வாக கூட்டங்களை கூட்டி வருகிறார்.
அவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வர, அவரது தொண்டர்கள் அவரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வைத்துக் கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகர் முழுவதிலும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் விஜய் கள்ளழகர் வேடமிட்டபடி, தலையில் தலைப்பாகையுடன், உடல் முழுவதும் நாமம் பூசிய படி கையில் தண்ணீர் தோப்பரை வைத்தபடி உள்ள படத்துடன் பதிவிட்டு, விவசாயிகளின் நிலை உந்தன் வருகையால் தளிரட்டும் என்ற வாசகத்தோடு, தமிழ்நாட்டின் தளபதியே என்ற அடுக்கு மொழி வசனத்தோடு சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.
அதில் ஒருபுறம் கள்ளழகர் போல நடிகர் விஜய்யை அலங்கரித்து, மற்றொருபுறம் கிருஷ்ணர் படத்துடன் ஆயனே அழகனே என்ற வசனங்களை பதிவிட்டும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.