“அன்னா ஹசாரே போல் விஜய்” - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் 12வது நாளாக மக்களைத் தேடி பயணம் மேற்கொண்டனர். அப்போது திருவிக நகர் வடக்கு பகுதி, ஓட்டேரி, பாஷியம் ரெட்டி உள்ளிட்ட சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,
"நடிகர் விஜய் அன்னா ஹசாரே போல் தொடர்ந்து ஓராண்டு உண்ணாவிரதம் இருந்து களைந்து சென்றுவிட்டார். நேற்றைய நிகழ்வு நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்றைய மக்கள் பணியை சூரியன் உதிப்பதற்கு முன்பாக ஆரம்பித்துவிட்டோம். நடு இரவில்தான் மக்கள் பணியை முடித்து வீடு திரும்புவோம். இதுதான் திமுகவின் நிலை” என விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடத்தில் பேசிய விஜய்,“டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும்.
அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படிதானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை. ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதனை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்” என்று விஜய் திமுக மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு விஜய்யை விமர்சித்துள்ளார்.