ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய் - வைரலாகும் வீடியோ!
திருநெல்வேலியில் நடிகர் விஜய் நிவாரணம் வழங்கிய பின், இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த செல்ஃபி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததுடன், சிலரின் வீடுகளும் இடிந்தன.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது. கிட்டதட்ட 1,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவியை விஜய் வழங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 வழங்கினார்.
இதில் தூத்துக்குடி மாநகர பகுதியை சார்ந்த 500 பேர், புறநகரை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என பல்வேறு தரப்பில் பாதிக்கப்பட்டவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 400 பேரை தேர்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் உடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதில் இளைஞர்கள் கையசைத்தும், கத்தியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். விஜய்யின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அவரை ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.