விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ - படம் எப்படி இருக்கு?
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ படத்தின் திரைவிமர்சனத்தை இங்கு காண்போம்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ திரைப்டம் உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்’ போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது.
இதனிடையே சமீபத்தில் ‘மகாராஜா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப்படம் கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியானது. எதிர்பாராத விபத்தில் மனைவி இறந்து போக, தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வருகிறார் முடி திருத்தும் ’மகாராஜா’ விஜய்சேதுபதி. மகாராஜா, மகள் ஜோதியுடன் லட்சுமி என்பவரும் இருக்கிறார். திடீரென ஒருநாள் லட்சுமி காணாமல் போகிறார்.
லட்சுமியை தீவிரமாக தேட ஆரம்பிக்கிறார் விஜய்சேதுபதி. லட்சுமி யார்? விஜய்சேதுபதி அவரை தீவிரமாக தேடுவதன் பின்னணி என்ன? லட்சுமியை கண்டுபிடித்தாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதுதான் ‘மகாராஜா’ திரைப்படம். கதையை ஒரு வரியில் கூறவேண்டுமானால் ’மகளுக்காக பழிதீர்க்கும் அப்பா’ எனக் கூறலாம்.
படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. குறிப்பாக, கிளைமாக்ஸில் உண்மை தெரிந்து அனுராக் கஷ்யப்பிடம் அவர் கலங்கி நிற்கும் இடத்தில், தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். படத்தில் உடன் தோன்றும் மம்தா மோகன்தாஸ், அபிராமி, ‘பாய்ஸ்’ மணிகண்டன், முனீஷ்காந்த் என எல்லோரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நடிகர் நட்டி மற்றும் சிங்கம்புலியின் கதாபாத்திரங்கள். கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தன் கதாபாத்திரத்தை எனர்ஜியுடன் எடுத்து சென்றிருக்கிறார் நட்டி. அவருக்கான மாஸ் மொமண்ட் ஒன்றும் படத்தில் இருக்கிறது.
முதல் பாதியில் அய்யோ பாவம் என்று சொல்ல வைக்கும் சிங்கம்புலியின் கதாபாத்திரம், இரண்டாம் பாதியில் அடப்பாவி என்று பார்வையாளர்களை ‘ஆங்கிரி மோடு’க்கு மாற்றுகிறது. அந்த வாய்ப்பை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சிங்கம்புலி. படத்தில் வன்முறை காட்சிகள் அதீகமான உள்ளது.
முதல் பாதி முடியும்போதே, இரண்டாம் பாதிக்கான கதை இதுதான் என்பதையும் ஓரளவு யூகிக்க முடிகிறது. ஆனால், கதைதான் ஹீரோ என்பதைப் புரிந்து கொண்டு வயதான கெட்டப், ஹீரோயினுடன் நோ ரொமான்ஸ், கமர்ஷியல் விஷயங்கள் இல்லை என்பதை எல்லாம் பெரிது படுத்தாமல், ‘மகாராஜா’வாக தனது ஐம்பதாவது படத்தில் ஜொலிக்கிறார் விஜய்சேதுபதி!