For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விஜய் சேதுபதி மகனின் கண்களை விஜய் மிகவும் பாராட்டினார்" -  ‘பீனிக்ஸ்’ பட இயக்குநர் அனல் அரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

விஜய்சேதுபதி மகனின் கண்களை விஜய் மிகவும் பாராட்டியதாக ‘பீனிக்ஸ்’ பட இயக்குநர் அனல் அரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
09:57 PM Jul 01, 2025 IST | Web Editor
விஜய்சேதுபதி மகனின் கண்களை விஜய் மிகவும் பாராட்டியதாக ‘பீனிக்ஸ்’ பட இயக்குநர் அனல் அரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
 விஜய் சேதுபதி மகனின் கண்களை விஜய் மிகவும் பாராட்டினார்     ‘பீனிக்ஸ்’ பட இயக்குநர் அனல் அரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
Advertisement

நடிகர் விஜய்சேதுபதி மகன் சூர்யாசேதுபதி ‘பீனிக்ஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்த படத்தை பிரபல பைட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். இந்த நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் அனல் அரசு நியூஸ் 7 தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

Advertisement

இதுகுறித்து அவர் பேசியதாவது,

‘‘என் அப்பா அரசுவும் பிரபல சண்டைக்கலைஞர்தான். எம்ஜிஆர் டீமில் இருந்தார். பல எம்ஜிஆர் படங்களில் பணியாற்றி இருக்கிறார். தொழிலாளி உட்பட பல படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார். சினிமா சண்டைபயிற்சி கலைஞர்கள், பைட் மாஸ்டர்கள் மீது எம்ஜிஆருக்கு தனி பாசம் உண்டு. அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பாசம் காண்பிப்பார். சினிமா சண்டைக்கலைஞர்கள் சங்கம் உருவாக அவரும் முக்கிய காரணம். இன்னும் சொல்லப்போனால் எனக்கு பெயர் வைத்தவர் கூட எம்.ஜி.ஆர்-தான். நான் சென்னை கே.கே. நகரில் வளர்ந்தேன்.

சின்ன வயது முதலே அப்பா பாணியில் சண்டை கலையின் மீது எனக்கு ஆர்வம் அதிகமானது. இந்த துறையில் 30 ஆண்டுகளுக்குமேல் இருக்கிறேன். மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைதான் நான் பணியாற்றிய முதல் படம். ஆரம்பத்தில் ராம்போ ராஜ்குமார், கனல்கண்ணன், ஸ்டன்ட் சிவா, பீட்டர் ஹெய்ன் உட்பட பலருடன் பணியாற்றினேன். உதவியாளராக 400 படங்களில் வேலை பார்த்தேன். பின்னர், சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர் ஆனேன். அருள் உட்பட பல படங்களில் பிரபலம் ஆனேன். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 250க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிவிட்டேன். இப்போதும் பிஸியாகி இருக்கிறேன்.

சினிமா துறையில் பெப்சி, விஜயன் உள்ளிட்ட சிலரே இயக்குனர் ஆகி இருக்கிறார்கள். நான் இந்த கதையை பல ஆண்டுகள் மனதில் வைத்து இருந்தேன். ஒரு அதிரடி தற்காப்பு கலை பின்னணியில் இதை உருவாக்கினேன். ரியலிஸ்டிக் ஆக வாழ்வியல் சார்ந்த கரு இது. குறிப்பாக, மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை தழுவி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. மற்றதை விட, இதில் வீரியம் அதிகம். கட்டுப்பாடுகள் அதிகம் கிடையாது, ஆக்ரோஷமாக இருக்கும். பல நாடுகளில் இந்த கலை பிரபலமாகி உள்ளது.

ஜவான் படத்தில் நாங்கள் பணியாற்றிபோது விஜய்சேதுபதியிடம் இந்த கதையை சொன்னேன். அடுத்து அவர் மகனை வைத்து எடுக்க பிளான் வந்தது. அவரும் ஓகே சொன்னார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்த கதைக்காக நடிப்பு, சண்டை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சூர்யாசேதுபதிக்கு பயிற்சி கொடுத்து அவரை தயார் செய்தோம். நானும் ஸ்கிரிப்ட்டுக்காக நிறைய உழைத்தேன். தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கள் இஷ்டப்படி படத்தை உருவாக்க வேண்டும் என்பதால் நாங்களே படத்தை தயாரித்தோம். என் மனைவி ராஜலட்சுமிதான் படத்தின் தயாரிப்பாளர்.

பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பைட் மாஸ்டராக பணியாற்றிக்கொண்டே இந்த படத்தில் இயக்குனராகவும் பணியாற்றினேன். இந்த பட சமயத்தில் ஷாருக்கானின் ஜவான், விஜயின் ஜனநாயகன், கார்த்தியின் வா வாத்தியார் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பரபரப்பாக இருந்தாலும், இதையும் ரசித்து செய்தேன். இந்த படத்தில் பல படங்களில் கவரவ வேடத்தில் நடித்த விஜய்சேதுபதி நடிக்கவில்லை. கதைக்கு அது தேவைப்படவில்லை. மற்றபடி படம் பார்த்துவிட்டு ரொம்பவே பீல் ஆனார். அவர் மனைவியும் மகன் நடிப்பை பார்த்துவிட்டு எமோஷனல் ஆகி, கண்கலங்கி விட்டார். வாழ்க்கை போராட்டம்தான் என்பது கதை. படத்தில் அருமையான பாடல்கள் இருக்கிறது பாபாபாஸ்கர் கொரியோகிராபி செய்தார்.

ஜனநாயகன் படத்தில் வேலை செய்தபோது பீனிக்ஸ் படத்தின் டிரைலரை பார்த்து ரசித்தார் விஜய். பல இடங்களை பாராட்டினார். குறிப்பாக, ஹீரோ சூர்யாசேதுபதியின் கண்களை பற்றி பேசிவிட்டு பாராட்டினார். அவருக்கு வாழ்த்துகளை சொல்ல சொன்னார். கடந்த சிலநாட்களாக சோஷியல் மீடியாவில் ஹீரோவை ஒரு மாதிரி பேசுகிறார்கள். கமென்ட் அடிக்கிறார்கள். அது ஏன் என்பது எனக்கு தெரியலை. பல கேள்விகளுக்கு படத்தின் உழைப்பு, வெற்றி பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்"

- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்

Tags :
Advertisement