120 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!
நீலாங்கரை பகுதியில், பணிபுரிந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு விஜய் மக்கள் இயக்க சார்பில் பாத பூஜை செய்யப்பட்டு, ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
சென்னையில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என பலரும் மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் பல உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ( டிச. 10 ) சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில், பணிபுரிந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் இ.சி.ஆர் சரவணன் தலைமையில், பாத பூஜை செய்யப்பட்டது. பாத பூஜை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தூய்மை பணியாளர்கள் மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். இந்நிகழ்விற்கு பின், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனைவருக்கும் ஐந்து கிலோ அரிசியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.