தவெக மாவட்ட நிர்வாகிகளை நியமித்து விஜய் அறிவுறுத்தல்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது. ஆனால் கட்சியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தது.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் தவெகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதற்கிடையே, கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று மாவட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதற்கான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று(ஜன.24) நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய், நேர்காணல் செய்து 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்துள்ளார்.
அதன்படி முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அறிவித்த விஜய் அவர்களிடம், “கட்சிப் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் கூடாது. தவறான நடவடிக்கையை மேற்கொண்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என அரைமணி நேரம் கலந்துரையாடி அறிவுரை கூறியுள்ளார்.