போராட்டகாரர்கள் உடனான சந்திப்பு - பரந்தூருக்கு கட்சி கொடி ஏந்தியபடி விஜய் வருகை!
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினார்.
மேலும், பரந்தூர் கிராம மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதற்காக, தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை ஏகானாபுரத்தில் உள்ள தனியார் சந்திக்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செயல்படுத்தி வந்த நிலையில், அப்பகுதியில் சோதனை சாவடிகளில் அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டகாரர்களுடான சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு பிரச்சார வாகனத்தில் விஜய் தற்போது வருகை தந்துள்ளார். அவர் வரும் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதற்கேற்ப விஜய் தனது கட்சி கொடியை ஏந்தியபடி தொண்டர்களை பார்த்து கையசைத்து மண்டப வளாகத்திற்குள் நுழைந்து தற்போது பேசி வருகிறார்.