விஜய் பட நடிகர் ஜெயசீலன் காலமானார்!
நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என பல படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயசீலன் (40). கடந்த 2 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது. சினிமா துறையில் சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயசீலன் திருமணமே செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
நடிகர் ஜெயசீலனின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், சில படங்களில் மட்டுமே வசனம் பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி தெறி படத்தில் தப்பு தப்பாக ரைம்ஸ் படிக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இவரின் திடீர் மறைவிற்கு சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.