விஜய்... கல்வி.... அரசியல் - வெற்றியைத் தருமா விஜய்யின் வியூகம்.?
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக வலம் வரும் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றியைத் தருமா..? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜய்யின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதை பார்க்கவும் முடிகிறது என்கிறார்கள். நிர்வாகிகள் சந்திப்பு மட்டுமின்றி வாக்காளர்கள் விபரம் சேகரிப்பு, நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு பாராட்டு, பயிலகம் வரிசையில் நூலகங்களையும் தொடங்கியுள்ளது, விஜய் மக்கள் இயக்கம். இவை அனைத்திலும் 234 தொகுதிகளையும் குறி வைத்து களமிறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
களமிறங்கிய மக்கள் இயக்கம்
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து, தீவிர உறுப்பினர் சேர்க்கை, சட்டமேதை அம்பேத்கர், விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாளின் போது அவர்களது சிலைகளுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். கடந்த மே 28ம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒரு நாள் மதிய உணவு, இதைத் தொடர்ந்து ஜூன் 17ம் தேதி 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சந்திப்பு, ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில் மாலை நேர படிப்பகம் திறக்கப்பட்டன.
விஜய் நூலகம் திறப்பு
இவற்றைத் தொடர்ந்து, கடந்த 18ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ’தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது. அன்றைய தினமே பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3, நாமக்கல், சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 10 இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன. அடுத்த கட்டமாக நவம்பர் 23-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 5, கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 21 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
திமுகவின் மாலை நேரக் கல்லூரிகள்
படிப்பகம், நூலகங்கள் திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் 1950, 60-களில் திமுக, இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுத்த திட்டங்களைப் போல் அமைந்துள்ளன என்கிறார்கள். குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய அண்ணா, தன்னைப் போலவே மக்களைக் கவரும் பெரும் பேச்சாளர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். அந்த பேச்சாளர்களின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரி வகுப்பறைகள் என்றும் அழைத்தனர். அந்த வகுப்பறைகள் மட்டுமின்றி, திமுகவின் கிளைகள் தோறும் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயரில் மன்றங்களைத் தொடங்கினர். அந்த மன்றங்கள் நூலகங்களாகவும் செயல்பட்டன. இன்றைய டியூசன் சென்டர்களுக்கு முன்மாதிரியாக அன்றைய படிப்பகங்கள் செயல்பட்டன. இவற்றில் கட்சியினர் மட்டுமின்றி, அப்பகுதி சார்ந்த ஏழை, எளிய மக்களும் பலனடைந்தனர்.
நூலகங்களில், முரசொலி மற்றும் தலைவர்கள் நடத்திய இதழ்கள், வரலாற்றுப் புத்தகங்கள், தலைவர்களின் உரைத் தொகுப்புகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கும். கட்சியின் கொள்கை, தலைவர்களின் பேச்சு, அவற்றை அப்பகுதி மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகளும் அங்குதான் திட்டமிடப்பட்டன. அடுத்தகட்ட நிகழ்வுகளையும் அங்குதான் தீர்மானித்தனர். திமுகவின் மன்றங்கள் மட்டுமல்ல, டீக்கடை, முடித் திருத்தகம் உள்ளிட்ட இடங்கள் அரசியல் சபைகளாகவும் மாற்றம் பெற்றன. அரிசி விலை உயர்வு தொடங்கி, சர்வதேச அரசியல் வரை அலசி ஆராயப்பட்டதையும் காண முடிந்தது.
கம்யூனிஸ்ட்களின் அரசியல் வகுப்புகள்
இதே போல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிலிருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வட்ட, கிளை, தொகுதிவாரியாக அரசியல் வகுப்புகளை நடத்தி வந்தன. கட்சியின் கிளை, பகுதி, மாவட்ட அலுவலங்களில் படிப்பகம், அரசியல் வகுப்புகளை என நடத்தினர். மாவட்ட, மாநிலக் குழுவின் முடிவுகள், பிரச்சார வழிகாட்டுதல்கள், மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். அப்பகுதி இளைஞர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மூலம் கட்சிக்கும் இயல்பாக இளைஞர்கள் வருகையும் தந்தனர். இன்றைக்கு போல், ஒரு நொடியில் பலருக்கும் தகலைப் பரிமாறும் சமூக வலைதள வாய்ப்புகள் அன்றைக்கு இல்லாத நிலையில், இது போன்ற படிப்பகங்கள், நூலகங்கள், மன்றங்களே மக்களோடு தொடர்புப் படுத்திக் கொள்ள முக்கிய தளமாக அமைந்தன. இவைதான் கட்சி வலுவாக அடித்தளம் அமைக்கவும் காரணமாக இருந்தன.
இளைஞர்கள், மாணவர்கள் திராவிட, பொதுவுடமை இயக்கங்களில் ஆர்வமோடு இணைந்தனர். திமுக மற்றும் கம்யூனிஸ்டுகளின் இந்த நடைமுறை 1980-ஆம் ஆண்டு வரை தீவிரமாக இருந்தது. தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு வரை குறைந்த இடங்களிலும் நடந்தன. இன்றைக்கு அவை வெகுவாக குறைந்து விட்டன என்கிறார்கள்.
அதே போன்று தொலைநோக்கு திட்டத்தோடு, இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து தொகுதிவாரியாக களமிறங்கியுள்ளது விஜய மக்கள் இயக்கம் என்கிறார்கள். திமுக, கம்யூனிஸ்டுகளின் ஆரம்ப கால வியூகம், எதிர்கால அரசியலை திட்டமிடும் விஜய்க்கும் வெற்றியைக் கொடுக்குமா...? என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.