“விஜயகாந்த் வழியில் விஜய் பயணிக்கவில்லை” - இயக்குநர் பேரரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
விஜயகாந்த் வழியில் விஜய் பயணிக்கவில்லை, எம்.ஜி.ஆர் வழியில் தான் பயணிக்கிறார் என இயக்குநர் பேரரசு நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் அரசியல் கட்சி தொடங்கினார். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலர் தங்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் பேரரசு விஜய் கட்சி தொடங்கியது தொடர்பாக நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது;
நான் பாஜகவை சார்ந்தவனாக இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறேன். தமிழக வெற்றி கழகம் என அற்புதமான கட்சி பெயரை அறிவித்துள்ளார். திராவிடம் என்று வைத்தால் தான் தவறு. கழகம் என்று வைத்ததில் தவறில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களம் காணலாம். ஆனால், 2031ல் தான் வெற்றி பெற முடியும். ஏதாவது ஒரு கட்சியுடன் கண்டிப்பாக கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும்.
தனித்து அமைத்தால் அது கடினம் தான். திமுக மற்றும் அதிமுகவில் கண்டிப்பாக கூட்டணி அமைக்க மாட்டார். பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் தான் கூட்டணி அமைப்பார். விஜயகாந்த் வழியில் விஜய் பயணிக்கவில்லை. விஜயகாந்த் எம்ஜிஆர் வழியில் தான் பயணித்தார். எம்ஜிஆர் வழியில் தான் இருவருமே பயணிக்கின்றனர்.
விஜயகாந்த் வேறு. விஜய் வேறு. விஜயகாந்த் உரிமை எடுத்து வாடா போடா என பேசுவார். அதே போல், தவறு செய்தால் உடனடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பார். ஆனால் விஜய் அப்படி கிடையாது மிகவும் அமைதியானவர். சிறிது பொறுமையானவர். அதற்காக அரசியலில் தகுதி இல்லை என்று கூற முடியாது. பொறுமையாக இருந்தாலும் வல்லவர். அரசியலில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். 2031 தான் அவரால் ஜெயிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.