“ஒரே மேடையில் விஜய், திருமாவளவன்?” - திமுகவின் நிலைப்பாடு குறித்து எம்பி #Kanimozhi விளக்கம்!
திமுக கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் (india turns pink) நிறுவனம் இணைந்து நடத்தும், இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் துவக்க விழா சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் மாதிரி பள்ளியில் இன்று (நவ. 7) நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பங்கேற்றார். மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதன் அவசியம் மற்றும் மார்பக புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனிமொழி எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியாகும். இந்த கூட்டணியின் ஒரே லட்சியம் இந்திய இறையாண்மை, மதசார்பற்ற தன்மையை பாதுகாப்பதாகும். இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. ஜனநாயக நாட்டில் கட்சி துவங்குவது, பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. இதற்கு நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து, திருமாவளவன் - விஜய் ஒரே மேடையில் பங்கேற்க உள்ள விவகாரம் குறித்த கேள்விக்கு, “திருமாவளவன் கூட்டணி குறித்து மிக தெளிவாக கூறிவிட்டார். திருமாவளவன் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பதை கண்காணிப்பது எங்கள் வேலை அல்ல” என தெரிவித்தார். மேலும், அமெரிக்கா தேர்தலில் இந்தியா வம்சாவளி கமலா ஹாரிஸ் தோல்வியுற்ற கேள்விக்கு, ”ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இதில் நான் கருத்து சொல்ல விருப்பமில்லை’’ என தெரிவித்தார்.