#ViduthalaiPart2 | பாதி திரையரங்குகளில்... மீதி ஓடிடி-யில்!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் பாதி பாகம் திரையரங்குகளிலும், மீதி பாகம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், உலகம் முழுவதும் இப்படம் டிச. 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை வெற்றிமாறன் இந்த இரண்டாம் பாகத்திற்காக எடுத்துள்ள காட்சிகளின் நீளம் 4 மணி நேரம் இருப்பதாகவும், தற்போது எடுத்து வரும் காட்சிகள் அனைத்தையும் இணைத்து எவ்வளவு கிரிப்பாக படத்தொகுப்பு செய்தாலும் 4 மணி நேரத்திற்கு குறைய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் விடுதலை 2ம் பாகத்தை இரண்டரை மணி நேரம் விதமாக தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் மீதி படத்தை சில நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.