“வாக்குப்பதிவின் போது எடுக்கப்படும் வீடியோக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” - உச்ச நீதிமன்றம்!
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1200லிருந்து 1500 உயர்த்தப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
2011ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. பின்னர் எந்த அடிப்படையில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது என்று மனுதாரர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இப்படி எண்ணிக்கையை உயர்த்துவது வாக்குப்பதிவு நேரத்தை மேலும் தாமதம் செய்யும், வாக்குச் சாவடிகளில் கூட்டத்தை அதிகரிக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் எண்ணிக்கையை 1500ஆக உயர்த்தும் போது ஏற்படும் சூழ்நிலையை எப்படி சமாளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியது.
பின்னர், இந்த மனுதொடர்பாக தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேவேளையில் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தேர்தலின் போது பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைத்திருக்க தேவை இல்லை என்று அண்மையில் தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வீடியோ காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.