கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வீடியோக்கள் நீக்கம்... யூடியூபர் ஷியாம் மீரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!
சமூக வலைதளத்தில் யூடியூபர் ஷியாம் மீரா சிங் என்பவர் கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இதையடுத்து மேற்கண்ட வீடியோ பதிவுக்கு எதிராக ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அதில், சமூக வலைதளத்தில் ஷியாம் மீரா சிங் தங்களது மையத்தைப்பற்றி தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தங்களது ஈஷா யோகா மையத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. எனவே வீடியோ பதிவை நீக்கவும், இதுபோல அவதூறு வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது
இந்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் கடந்த மார்ச் 12ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆதாரங்கள் இல்லாமல் எந்தவித தகவலையும் எப்படி வெளியிட முடியும் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, ஜக்கி வாசுதேவ் மற்றும் கோவை ஈஷா யோக மையம் ஆகியவை தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள வீடியோவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் மேற்கொண்டு எந்த வீடியோ பதிவையும் பதிவேற்றம் செய்யக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஈஷா யோகா மையம் தொடர்பான வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் ஷியாம் மீரா சிங் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவுக்கு எழுத்துப்பூர்வமான கூடுதல் பதிலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் ஷியாம் மீரா சிங் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.