நெப்போலியன் மகன் குறித்த வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கம்!
நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு திருமணமாகி குணால், தனுஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷுக்கு நான்கு வயதாகும்போது தசை சிதைவு நோய் தாக்கியது. இதற்காக சிகிச்சை பெற்று தனுஷ் ஓரளவு குணமடைந்தார். இதற்கிடையில், திருநெல்வேலியை அடுத்து மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்சயாவுக்கும், தனுஷுக்கும் ஜப்பானில் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்சயா குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக நடிகர் நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளையின் மருத்துவமனை மருத்துவர் டேனியல் ராஜா, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகார் எதிரொலியாக அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த வீடியோக்கள் youtube தளத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
15 நாட்களில் வீடியோக்கள் நீக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்த நிலையில் இரண்டே நாட்களில் வீடியோக்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.