ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!
பிரபல யூடியூபர் காமியா ஜனி, பிஜேடி தலைவர் வி.கே பாண்டியனுடன் பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் கலந்துரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது.
பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐஏஎஸ் அதிகாரியுமாக இருந்தவருமான வி.கே பாண்டியன் மற்றும் யூடியூபர் காமியா ஜனி ஆகியோர் ஒடிசாவில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயிலுக்கு சமீபத்தில் சென்றுள்ளனர். இது குறித்து யூடியூபர் காமியா ஜனி பதிவிட்டுள்ள வீடியோவில், ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் மஹாபிரசாத்தின் முக்கியத்துவம், கோயில் மேம்பாட்டிற்காக நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து வி.கே பாண்டியன் விரிவாகப் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறப்படும் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தது பல கோடி இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தியுள்ளதாக ஒடிசா மாநில பாஜக பொதுச்செயலாளர் ஜடின் மோஹண்டி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
பல கோடி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக, வி.கே பாண்டியன் மற்றும் காமியா ஜனி மீது ஐ.பி.சி 295-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்யாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்."
இவ்வாறு ஒடிசா பாஜக பொதுச்செயலாளர் ஜடின் மோஹண்டி கூறியுள்ளார்.