For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாக். வெற்றியால், இந்தியாவுடனான டெஸ்ட்டில் நம்பிக்கை" | சென்னையில் #Bangladesh தலைமை பயிற்சியாளர் பேட்டி!

02:49 PM Sep 17, 2024 IST | Web Editor
“பாக்  வெற்றியால்  இந்தியாவுடனான டெஸ்ட்டில் நம்பிக்கை    சென்னையில்  bangladesh தலைமை பயிற்சியாளர் பேட்டி
Advertisement

பாகிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றி இந்திய டெஸ்ட் தொடருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாக வங்கதேச தலைமை பயிற்சியாளர் சாடிக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னையில் வங்கதேச தலைமை பயிற்சியாளர் சாடிக ஹத்துருசிங்க செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது,

“சென்னையில் ஆடுகளம் நன்றாக இருக்கிறது. வீரர்கள் போராடக்கூடிய அளவிற்கு இந்த ஆடுகளம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் இப்போதெல்லாம் ஆடுகளத்தின் தன்மை மாறி விடுகிறது. எப்போது மாறும் என்பது தெரிவதில்லை. பாகிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றி இந்திய டெஸ்ட் தொடருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, நாங்கள் அந்த தொடரில் விளையாடிய விதம், ஆட்டத்தின் முக்கியமான தருணங்களை கையாண்ட விதம், இரு ஆட்டங்களிலும் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டுவந்த விதம் ஆகியவையே இந்திய தொடர்கான நம்பிக்கை கொடுத்துள்ளது.

அணியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சிறந்த சுழல் பந்துவீச்சு தாக்குதலும் உள்ளது. அணியின் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் அனைவருமே பிரதான பேட்ஸ்மேன்கள். இம்முறை எங்களது அணி சிறப்பாக உள்ளது. இதுவே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எங்களால் சிறப்பாக விளையாடி முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. அணியை பலப்படுத்துவது நீண்ட நாள் செயல்முறை. இது ஒரே இரவில் நடக்காது.

எனக்கு முந்தைய பயிற்சியாளர்கள் அணியில் நிறைய வேலைகளை செய்துள்ளனர். உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்களை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு திட்டங்கள் உள்ளன. ஷாகிப் அல்ஹசன் வங்கதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் பங்களித்து வருகிறார். அணியில் இடம்பெறும் போதெல்லாம் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து மெஹதி ஹசனும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறார். கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் அவருடைய ஆட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் தனது பேட்டிங் திறமையை மேம்படுத்தியுள்ளார். எனினும் எப்போதும் அவருக்கு பந்துவீச்சு அவருடைய முக்கிய பலம். நல்ல வேலையாக இந்த தொடரில் விளையாடக்கூடிய எந்த வீரர்களுக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement