சென்னை கொண்டு வரப்படும் வெற்றி துரைசாமி உடல் | மாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது...!
விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. தொழில் அதிபரும், சினிமா இயக்குநருமான இவர், தாம் புதிதாக இயக்கவிருந்த திரைப்படத்திற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வெற்றி துரைசாமியும் அவரின் உதவியாளருமான கோபிநாத் என்பவரும் காரில் சிம்லா நோக்கி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் அவர்களது கார் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூவரில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் வெற்றி துரைசாமி குறித்த தகவல் மட்டும் அப்போது கிடைக்கவில்லை. உள்ளூர் மக்கள் உதவியோடு விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு சட்லஜ் ஆற்றில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.இருப்பினும் பாறை இடுக்குகளில் மூளை திசு கண்டெடுக்கப்பட்டது. வெற்றி பயன்படுத்திய சூட்கேஸ் மற்றும் செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், வெற்றியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்தார். மேலும் சட்லஜ் நதியில் டெமோ பொம்மையை வைத்தும் வெற்றியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காணாமல் போன வெற்றியை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 9 நாட்களாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர், உள்ளூர் காவல்துறையினர், ஆழ்கடல்
நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 9 நாட்களாக வெற்றியை தீவிரமாக தேடி வந்த நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சட்லஜ் நதியில் பொவாரி என்ற இடத்திற்கு அருகே, ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வெற்றியின் உடலை நேற்று கண்டெடுத்தனர்.
இதற்கிடையில் தன் மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 கோடி என சைதை துரைசாமி அறிவித்திருந்தார். மேலும் தான் கூறிய வார்த்தையை நிறைவேற்றும் வகையில் வெற்றி துரைசாமியின் உடலை கண்டுபிடித்த மீட்பு பணியாளருக்கு ஒரு கோடி ரூபாயை சைதை துரைசாமி வழங்கினார்.
மேலும் இன்று மாலை 5 மணிக்கு சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெற்றி துரைசாமியின் உடல் வைக்கப்படவுள்ளது. மாலை 6 மணி அளவில் கண்ணம்மாபேட்டை மயான பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.