For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இமாசல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்!

10:16 PM Feb 13, 2024 IST | Web Editor
இமாசல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்
Advertisement

இமாசல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Advertisement

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர் தனது உதவியாளர் கோபிநாத்துடன் (35) இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது.இதில் கார் டிரைவர் தஞ்ஜின் இறந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே சட்லஜ் நதியில் 6 கி.மீ. தொலைவில் பாறைக்கு அடியில் வெற்றியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து நேற்று பகலில் மீட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இமாசலபிரதேச போலீஸ் துணை கமிஷனர் அமித் ஷர்மா வெளியிட்டார். பின்னர் வெற்றி துரைசாமி உடல் உடற்கூராய்விற்காக சிம்லா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது.

பின்னர் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல் அமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதே போன்று வெற்றி துரைசாமி உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை அடுத்து, இரவு 8.30 மணிக்கு மேல் வெற்றி துரைசாமியின் உடல் சி.ஐ.டி, நகர், சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கண்ணம்மாபேட்டை மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இரவு 9 மணி அளவில் இறுதிச்சடங்குகள் நடந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags :
Advertisement