#Madhyapradesh -ல் பெரிய கட்டியுடன் 6 மாதங்களாக போராடிய கிளி | 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்!
மத்தியப்பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் 21 வயதான கிளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கட்டி அகற்றிப்பட்டது.
மத்தியப்பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் ஒருவர் நீண்ட காலமாக கிளியை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அவர் வளர்த்து வந்த கிளியின் கழுத்தில் கட்டி இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து, கால்நடை மருத்துவர்களிடம் தனது செல்லப்பிராணியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம் என கால்நடை மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின்படி, தினமும் தனது கிளிக்கு மருந்து வழங்கி வந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : திருப்பதி லட்டு | #ChandrababuNaidu கிளப்பிய சர்ச்சையால் பரபரப்பு
இந்நிலையில், 6 மாதங்கள் கடந்தும் கிளி குணமடையவில்லை. இதனால், மீண்டும் கால்நடை மருத்துவரை சந்தித்தார். அப்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். அதன் பிறகு, கடந்த 15ம் தேதி இரண்டு மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்து கிளியின் கழுத்தில் இருந்த கட்டியை கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். சிகிக்கை முடிவடைந்து கிளி உயிருடன் இருப்பதை கண்டு கிளியின் உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது :
"இது என்னுடைய முதல் அறுவை சிகிச்சை. அந்த கிளியின் கழுத்தில் சுமார் 20 கிராம் எடை உள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது. கிளியின் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்ததால், இந்த அறுவை சிகிச்சை சற்று கடினமாக இருந்தது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.