தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்!
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று ஓய்வு பெறுகிறார்கள். இதையொட்டி அவர்கள் 2 பேருக்கும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
சங்கர் ஜிவால், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக போலீஸ் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் இந்த புதிய பணியை தொடங்குகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாடு போலீஸ்துறையின் நிர்வாக டி.ஜி.பி.வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று மாலை 4 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்கும் வெங்கடராமனிடம் ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.