மறைந்த கலைஞர்களை உயிர்ப்பித்த வெங்கட் பிரபு! #AI உதவியால் #TheGoat-ல் நடத்திய மேஜிக்!
நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது, அவர்களின் குரலை ஒலிக்க வைப்பதற்கு தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'திமிறி எழுடா' என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடி உள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர். இதில் பம்பா பாக்யா உயிரிழந்து ஓராண்டாகிறது. அப்படி இருக்கையில் அவர்களது குரலில் இந்த பாட்டு எப்படி சாத்தியம் என்பது தான் அனைவரது கேள்வியாக இருந்தது.
அதனை தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமாக்கி காட்டி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இன்று டிரெண்டிங்கில் உள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை லால் சலாம் பட பாடலுக்கு பயன்படுத்தி புது ட்ரெண்டை உருவாக்கி இருந்தார் ஏ.ஆர்.ரகுமான். அவரின் இந்த முயற்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில், மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள்.
இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன. கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார்கள்.
யுவன் இசையில் விஜய்யின் குரலுடன் சர்ப்ரைஸாக மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் குரலில் “சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதோ” எனும் இரண்டாவது பாடல் வெளியாக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதேபோல், விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில், அவரது கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் லுக்கைத்தான் இந்தப் படத்தில் ரீ-கிரியேட் செய்திருப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.