வேங்கைவயல் வழக்கு - குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வழக்கை முடித்த சிபிசிஐடி அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்து கிருஷ்ணன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நீதிமன்றத்தில் நீதிபதி பதவி காலியாக இருப்பதால், வழக்கை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விசாரிப்பார் என்று மாவட்ட முதன்மை நீதிபதி செரஸ்தார் அறிவித்தார். இந்நிலையில் இன்று மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.
இதனையடுத்து விசாரணையின்போது சிபிசிஐடி தரப்பில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிவியல் பூர்வமான தடயங்களின் ஆய்வு முடிவுகள், வீடியோ, ஆடியோ ஆதாரங்கள், செல்போன் பதிவு ஆதாரங்கள் உள்ளிட்டவைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.