#Vellaiyan மறைவுக்கு இரங்கல் | கடைகள் அடைப்பு!
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைiவயொட்டி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர்கள் சங்க பேரவை மற்றும் வணிகர்கள் சங்க பேரமைப்பினர் அறிவித்து உள்ளர்.
வெள்ளையன் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் மாநிலத்தில் இன்றுமுதல் 2 நாட்களுக்கு கடை அடைக்கப்பட்டுஅஞ்சலி செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, மறைந்த வெள்ளையன் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்படும். இதைத்தொடர்ந்து, அவரது உடல் நாளை சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதால், நாளை வியாழக் கிழமை தென் மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்படும் என வணிகர்கள் சங்க பேரமைப்பினர் அறிவித்து உள்ளனர்.
முன்னதாக, 76 வயதான, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவரான த.வெள்ளையன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வணிகர் சங்க பேரவையினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவரது உடல் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இன்று மாலை அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தென்மாவட்ட மக்கள் மற்றும் வணிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டு, பின்னர் நாளை மாலை அவருக்கு சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த வெள்ளையனுக்கு, தங்கம்மாள் என்ற மனைவியும், டைமன்ட் ராஜா, தீபன் தினகரன், மெஸ்மெர் காந்தன் என்ற மூன்று மகன்கள்; அனு பாரதி, அர்ச்சனா தேவி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.