வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி - இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில் இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இறந்து போனவர்களின் ஆன்மாவிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும், அவர்களை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம், சிறப்பு திருப்பலிகளில் பங்கேற்பதோடு, இறந்துபோன தனது உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து பிரார்த்தனை செய்வர்.
அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா...? - இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!
சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது. இந்த பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.