வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு - இருவர் கைது!
சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டடத்தின் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேளச்சேரியில் டிச.4-ம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 8 பேர் சிக்கியிருப்பத்தாக கூறப்பட்டது.
கனமழை அதிகயளவில் பெய்து வந்ததால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வந்த நிலையில், 6 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 50 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நரேஷ், ஜெயசீலன் ஆகியோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து, 5 நாள்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணியில், இன்று (டிச. 8) அதிகாலை நரேஷ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த மீட்புக் குழுவினர் தற்போது மண்ணில் பதிந்திருந்த ஜெயசீலன் உடலை மீட்டுள்ளனர்.
மேலும் பள்ளத்தில் இன்னும் வேறு யாராவது சிக்கி உள்ளனரா? என்பது பற்றி மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அடித்தளத்தை வலுவாக அமைக்காமல் கட்டுமானப் பணி மேற்கொண்டதாலேயே இந்த விபத்து நடந்திருப்பதாக அறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் எழில், சந்தோஷ், சிவக்குமார் ஆகிய கட்டுமான பணிக்கான மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களான எழில், சந்தோஷ் ஆகியோரை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் எச்சரிக்கை விடுத்தும் கூட தொழிலாளர்களை ஏன் தங்க வைக்கப்பட்டனர். அதோடு பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.