நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை நெருங்கிய #VeeranamLake | விவசாயிகள் மகிழ்ச்சி!
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து கீழணைக்கு வரும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.இந்த ஏரி மூலம் 45,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.
இந்நிலையில், ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நீர் செங்கால் ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள் : மது போதையில் ஏற்பட்ட தகராறு | 2 மகன்களுடன் சேர்ந்து கட்டட தொழிலாளியை கொலை செய்த தந்தை – #Sivakasi -ல் அதிர்ச்சி!
இந்நிலையில், கீழணையில் இருந்து ஏரிக்கு விநாடிக்கு 1,900 கன அடி தண்ணீர் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் ஓரிருநாளில் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும். இன்று ஏரியின் நீர் மட்டம் 47.30 கன அடியாக உள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.